குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குழந்தைகளுக்கு உடலில் வலியோ, காய்ச்சலோ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட்டாலும் அவர்களால் தாயிடம் கூற முடியாது.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குழந்தைகளுக்கு உடலில் வலியோ, காய்ச்சலோ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட்டாலும் அவர்களால் தாயிடம் கூற முடியாது. குழந்தைகளை சரியாக கவனித்து வந்தால் மட்டுமே அவர்களது பிரச்னையை உடனடியாக அறிந்து மருத்துவரை நாட முடியும். குழந்தைகள் பல விதம் உண்டு. குழந்தைகளை பார்த்தவுடன் அவர்களை கையில் எடுத்து கொஞ்ச தோன்றும். ஆனால், சில குழந்தைகள் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடல் மட்டும் நோஞ்சான் போல்தான் இருக்கும். வயிறு மட்டும் பெருத்து காணப்படும்.
ஆனால், உடலில் சதைப்பிடிப்பு இல்லாமல் எலும்பும் தோலுமாகத் தெரிவார்கள். அதிக சத்துள்ள உணவுப் பொருட்களைக் கொடுத்தும் குழந்தையின் உடல் தேறவில்லையே என தாய்மார்கள் கவலை கொள்வார்கள். குழந்தைகள் சாப்பிட்ட உணவு செரிக்காமல் குடலிலே சளியின் ஆதிக்கம் மிகுந்து கிருமிகளால் குடலில் உபாதை ஏற்படுத்தி குடல் வீங்கி காணப்படும். இந்த பாதிப்பு கொண்ட குழந்தைகளின் மலம் சளி போல் இறங்கும். சில வேளைகளில் மலச்சிக்கல் ஏற்படும்.
இதனால் வயிற்றில் உள்ள வாயு அதிகப்பட்டு வயிறு பலூன் போல் ஆகிவிடுகிறது. இதற்கு பழங்கால மருத்துவ முறைகளில் மாந்தம் என்று சொல்வார்கள். மாந்தம் என்பது குடல் செரிக்கும் தன்மையை இழந்து வயிறு பொருமி இருப்பதுதான். இந்த நிலையில் குழந்தையின் கல்லீரல் சிறிதளவு பாதிப்படையும். இதுபோல் குடலில் புழுக்கள் அதிகரித்து அவை உண்ட உணவில் உள்ள சத்துகளை உறிஞ்சிக் கொள்வதால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு ஏற்படும். வயிற்றுப் புழுக்கள் வரக் காரணம், அசுத்த நீரில் விளையாடுவது, சுகாதாரமில்லாத தண்ணீரைக் குடிப்பது, அசுத்த நீரில் குளிப்பது போன்ற சுற்றுப் புறசூழ்நிலைகளாலும் குழந்தைகளுக்கு வயிற்றுப் பொருமல் வர வாய்ப்புள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். மூக்கில் நீர் வடிந்து கொண்டிருக்கும். கை, கால் உணங்கி வயிறு பெருத்துக் காணப்படும். இளம் வயதில் ஏற்படும் இந்த வயிற்றுப் பொருமல் குழந்தை வளர வளர மற்றொரு நோயை உண்டாக்கும். புத்தி மந்தம், சரியாக சிந்திக்கும் தன்மையை இழத்தல், படிப்பில் போதிய கவனமின்மை, ஞாபகமின்மை போன்றவை உண்டாகும். குழந்தைகளின் ஞாபக திறனுக்கு கல்லீரலின் பங்கு அதிகம். ஞாபக சக்தியை தூண்டுவது பித்தம்தான். அத்தகைய பித்தத்தை சுரப்பது கல்லீரல்தான்.
கல்லீரலை பலப்படுத்தினாலே ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும் கல்லீரல் பாதிப்பினால் குழந்தைகள் சிறு வயதில் கண்ணாடி அணியும் சூழ்நிலை உருவாகும். கல்லீரலின் பாதிப்பினால் குழந்தைகளின் தன்மையைப் பொருத்து கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற நோய்கள் உண்டாகும். கண் நோய்களுக்கும், கல்லீரல் பாதிப்பு ஒரு காரணமாகிறது. உதாரணமாக கல்லீரல் பாதித்தால் கண்கள் மஞ்சள் நிறமாகக் காணப்படும். இதற்கு மருத்துவரை அணுகி கல்லீரல் பாதிப்பிற்கு மருந்து கொடுக்க வேண்டும். அதனோடு வயிற்றில் உள்ள சளியை மாற்றி உணவை செரிக்க வைக்கும் தன்மையை தூண்ட கூடிய மருந்துகளை கொடுக்க வேண்டும்.
மேலும் வயிற்று கிருமிக்கும் மருந்து கொடுத்து வந்தால் உண்ட உணவு நன்கு செரித்து குழந்தைகளுக்கு உண்டான வயிற்று பொருமல் மாறி ரத்தத்தில் சத்துக்கள் கலந்து உடல் நலம் தேறும். தாயின் அன்பும், அரவணைப்பும், குழந்தையின் சுகாதாரத்தை பேணிக்காப்பதில் விழிப்புணர்வுமே குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சியாகும். குழந்தை அன்பு, பாசம், பரிவு என எல்லாமே தாயிடமிருந்துதான் எதிர்பார்க்கும். அது அல்லாமல் போகும் சமயத்தில் குழந்தை மன இறுக்கத்திற்கு ஆளாக்கப்படும்.
இத்தகைய மன இறுக்கம் இருந்தாலும் குழந்தைகளுக்கு மேலே கண்ட நோய்களின் தாக்கம் உண்டாகும். முன்பு தாய்மார்கள் 2 வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பார்கள். ஆனால், இப்போது இரண்டே மாதத்தில் நிறுத்தி கொள்கின்றனர். இன்னும் சிலரோ குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால் தாயின் ஆரோக்கியம் கெட்டுவிடும் என எண்ணிக் கொண்டு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர். ஆனால், அது தவறான எண்ணமாகும்.
குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் அவசியமோ அதுபோல் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களின் உடலில் எல்லாச் சுரப்புகளும் சீராக சுரந்து உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. மேலும் தாய் தன் குழந்தைக்கு பாலூட்டும் போது குழந்தைக்கும் தாய்க்கும் பாசம் அதிகப்படுகிறது. இதிலிருந்து குழந்தைகள் ஆரோக்கியமாக வளர தாய்ப்பாலுடன் தாய்மார்களின் எண்ணம், செயல், பாசம், பரிவு என்ற தாய்ப்பாசமும் அவசியமாகிறது.