யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலனாய்வு உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலனாய்வு உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

கடமை அறையில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்த தேசிய புலனாய்வு பிரிவு உத்தியோகத்தரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலுள்ள பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, அம்பாறை மாவட்டம்- கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில், 21 வயது மதிக்கத்தக்க புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர்,  தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு இரவு 9 மணியளவில், கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் தாஹா செய்னுதீன் சென்று, விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து குறித்த சடலத்தை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு, பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம்- வடமராச்சி கரணவாய் மத்தி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய புலனாய்வு பிரிவு உத்தியோகத்தரான கே.கமலராஜ் என்பவராவார். இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.