சொந்த வாகனங்களில் பயணிப்போர் முகக்கவசங்கள் அணிய வேண்டுமா? சுகாதார பிரிவு விளக்கம்

சொந்த வாகனங்களில் பயணிப்போர் முகக்கவசங்கள் அணிய வேண்டுமா? சுகாதார பிரிவு விளக்கம்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொதுமக்கள் முகக்கவசங்களை எவ்வாறு அணிய வேண்டுமென பொது சுகாதார பிரதி பணிப்பாளர் வைத்திய நிபுணர் பபா பலிஹவதன விளக்கியுள்ளார்.

 

சொந்த வாகனங்களில் பயணிக்கும் போது மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடும் போதும் முகக்கவசங்கள் அணியவேண்டிய அவசியம் இல்லையென அவர் தெரிவித்தார்.

 

அதேபோல, நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, எந்தவொரு பிரதேசங்களிலும் பொசன் பௌர்ணமியை முன்னிட்டு தானங்கள் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் குறித்த பணிப்பாளர் குறிப்பிட்டார்.

 

தானங்கள் மற்றும் உலர் உணவுகள் வழங்கும் திட்டங்களை ஏற்பாடு செய்ய அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் இதற்காக சுகாதார பரிசோதகர்களிடம் கோரிக்கை முன்வைப்பதை தவிர்க்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 66 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அவர்களுள் 31 பேர் கடற்படையினராவர்.

 

19 பேர் கட்டாரிலிருந்தும், இரண்டு பேர் குவைட்டிலிருந்தும்  நாடுதிரும்பியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 14 தொற்றுறுதியானவர்கள் தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை.

 

இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 749 ஆக அதிகரித்துள்ளது.

 

நேற்றைய தினம் நாட்டில் மேலும் 13 கொவிட்-19 நோயாளர்கள் குணமடைந்தனர்.

 

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 இலிருந்து இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது.

 

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 902 ஆக அதிகரித்துள்ளது.

 

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் இதுவரையில் 11 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.