பெற்றோரிடம் இருந்து பொய் பேச கற்றுக்கொள்ளும் குழந்தைகள்

வேலை பார்க்கும் பெற்றோர்கள், தொலைபேசியில் மேலதிகாரியிடம் விடுமுறைக்காக விதவிதமாக பொய் சொல்கிறார்கள். அருகில் இருந்து கேட்கும் குழந்தைகள், அதையே தங்களுக்கும் பாடமாக்கிக்கொள்கிறார்கள்.

பெற்றோர்கள் அனைவருமே தங்கள் குழந்தைகள் பொய் சொல்லக்கூடாது என்று ஆசைப்படுகிறார்கள். தங்கள் குழந்தை பொய்யே பேசாது என்று அவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று ஒருநாள், அந்தக் குழந்தை அடுக்கடுக்காய் பொய் பேசுவதைக் கேட்டு அதிர்ந்து போகிறார்கள். இது மிகவும் கவனிக்கத் தகுந்த விஷயம். குழந்தைகள் சொல்லும் பொய்யை பெற்றோர் நம்புவதுபோல் காட்டிக்கொள்ளக்கூடாது.

 

முதலில் குழந்தைகள் விளையாட்டுத்தனமாக பொய் பேச ஆரம்பிப்பார்கள். அதன் பின்விளைவுகள் தெரியாமல், “என் பிள்ளை எவ்வளவு அழகாக பொய் பேசுகிறான் பாரு..” என்று சில பெற்றோர், குழந்தையை பாராட்டுவார்கள். அந்த பாராட்டு அவர்களை அடிக்கடி பொய் பேச வைக்கும்.

 

தான் சொல்லும் பொய்யை பெற்றோர்கள் நம்புகிறார்கள் என்று குழந்தை தெரிந்துகொண்டால், தொடர்ந்து பொய் சொல்ல ஆரம்பிக்கும். நாளடைவில் சகஜமாக அவர்கள் வாயில் இருந்து பொய் வெளிப்படும். பின்பு தனக்கு கஷ்டமான வேலையை தவிர்க்க பொய் சொல்ல பழகிக் கொள்வார்கள். சின்னச்சின்ன தண்டனைகளில் இருந்து தப்பிக்க அவர்களுக்கு, பொய் ஒரு கவசமாக பயன்பட்டுவிடும்.

 

 

இதெல்லாம் தெரிந்ததும் பிள்ளையை, பெற்றோர் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் தண்டனைகள் குழந்தைகளை திருத்துவதற்கு பதில், அவர்களிடம் வன்மத்தைதான் வளர்க்கும்.

 

பெற்றோர்கள் வீட்டில் இருந்துகொண்டே தான் இல்லை என்று சொல் என்று சிறுவர்களை தூண்டிவிடுகிறார்கள். அவர்கள் மூளையில் அந்தப் பொய் பதிவாகி விடுகிறது. வேலை பார்க்கும் பெற்றோர்கள், தொலைபேசியில் மேலதிகாரியிடம் விடுமுறைக்காக விதவிதமாக பொய் சொல்கிறார்கள். அருகில் இருந்து கேட்கும் குழந்தைகள், அதையே தங்களுக்கும் பாடமாக்கிக்கொள்கிறார்கள்.

 

குழந்தைகளின் ஒழுக்கக் குறைவு ஆரம்பமாவதே பொய்யில் இருந்துதான். பொய் ஒரு சாதாரண விஷயமல்ல. ஒரு பொய்யை, ஒரு சிறுவனால் சாதாரணமாக சொல்லிவிட முடியாது. அதற்காக அவன் ஒரு கணக்கு போடுவான். எப்படி பொய் சொன்னால், யாரை ஏமாற்ற முடியும்? என்று ஆளுக்கு தக்கபடி பொய் சொல்லத் தொடங்குவான். அதில் வெற்றி பெற்றுவிட்டால், அந்த கணக்கு அவனுக்கு அத்துப்படியாகிவிடும். அதன் பின்பு சுவாரசியமாக அதை பற்றி சிந்தித்து, அந்த கோணத்திலே செயல்படத் தொடங்கிவிடுவான். அது அவனது எதிர்காலத்தையே சிதைத்துவிடும்.

 

பொய் பேசக்கூடாது என்று குழந்தைகளிடம் சொல்லும்போதெல்லாம், உண்மையை ஏன் பேசவேண்டும்? என்பதை குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டும். உண்மையை சொல்லும்போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சி, நேர்மை போன்றவைகளை விளக்கவேண்டும். பொய் பேசும்போது மனதிலும், உடலிலும் ஏற்படும் மாற்றங்கள், குற்ற உணர்ச்சி போன்றவைகளை எல்லாம் எடுத்துச்சொல்லவேண்டும். ஒவ்வொரு பொய்யாலும் ஒருவரோ, ஒரு குழுவோ பாதிக்கப்படும். ஒவ்வொரு உண்மையாலும் மனதுக்கு திருப்திகிடைக்கும் என்பதை விளக்குங்கள்.