உச்சக்கட்ட அதிகாரங்களை பிரயோகிக்க மாவட்ட செயலாளர்களுக்கு அனுமதி

உச்சக்கட்ட அதிகாரங்களை பிரயோகிக்க மாவட்ட செயலாளர்களுக்கு அனுமதி

பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாழ்க்கையை தொடர்ந்தும் சிறந்த நிலையில் பேணுவதற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்ளுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை நாடு முழுவதும் பரவுவதைக் கட்டுப்படுத்தி, தத்தமது மாவட்டங்களை பாதுகாக்கும் பொருட்டு மேற்கொள்ளக்கூடிய உச்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த அதிகாரம் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

அந்தந்த மாவட்டங்களின் தற்போதைய நிலைக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதுடன், விசேடமாக விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பாதுகாக்கப்படும் வகையில் விவசாயத்துறையை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

விவசாயத்துறைக்கு மேலதிகமாக மாவட்ட மட்டத்தில் சுகாதாரம், போக்குவரத்து, கடற்றொழில், தொழிற்சாலை நடவடிக்கைகளை மேற்கொள்ளல், நீர் மற்றும் மின்சார விநியோகம், கழிவு முகாமைத்துவம், எரிபொருள் வழங்கல் ஆகிய அத்தியாவசிய செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட துறைகளின் உற்பத்திச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு விவசாயிகளுக்கு சிறந்த தரத்திலான உரத்தை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முடிந்தளவு உயர் மட்டத்தில் பேணுவதற்கும், மக்களின் வாழ்க்கையை நிலையான மட்டத்தில் பேணுவதற்கும் அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது.

உலகின் பிரதானமான நாடுகள் கொரோனா தொற்றுக் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள சந்தர்ப்பத்திலும் கூட முழு நாட்டிற்கும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படாது மக்களின் தேவைகளை பூர்த்திசெய்து, பொருளாதார இலக்குகளை நிறைவேற்றிக்கொண்டு தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொண்டு வருகிறது என்றார்.