60 வயதுக்கு மேற்பட்டோர் உயிரிழக்கும் ஆபத்து அதிகம்
கொரோனாவால் உயிரிழக்கக் கூடிய ஆபத்து இளைஞர்களுடன் ஒப்பிடும் போது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே அதிகமுள்ளதாக பணிப்பாளர் விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்தார்.
இதேவேளை மேல் மாகாணத்தில் அண்மையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 30 சதவீதமானோர் 60 வயதிற்கு மேற்பட்டோர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னரை விட தற்போதுள்ள வைரஸின் தன்மையானது பரவும் வேகம் அதிகமாகும். சுமார் 25 வயதுடைய இளைஞர்களுடன் 60 வயதுடையவர்களை ஒப்பிட்டு அவதானிக்கும் போது 60 வயதுடையோர் மரணிக்கக் கூடிய எச்சரிக்கை 30 சதவீதம் அதிகமாகக் காணப்படுகிறது.
அத்தோடு அதிக இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் என்பவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் இதில் உள்ளடங்குவர்.
ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் தமது சேவைகளை ஆற்றும் போது அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
மக்கள் ஒன்று கூடும் இடங்களில் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதால் இயன்றவரை உற்சவங்கள் வைபவங்களை குறைத்துக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.