கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் சிறப்பாக செயற்படுகின்றது...!

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் சிறப்பாக செயற்படுகின்றது...!

நாட்டில் கொவிட்-19 தொற்றை கட்டுபடுத்துவதற்கு அரசாங்கம் சிறப்பாக செயற்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மருத்துவ கட்டளை சட்டத்திற்கு கீழான சில கட்டளைகள் இன்று சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அரசாங்கம் இந்த விடயத்தில் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை.

உலக சுகாதார ஸ்தாபனம் சகல தரப்பினரிடமும் கொவிட்-19 விடயத்தில் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.

தீர்மானங்கள் மேற்கொள்ளும் போது சுகாதார தரப்பினரின் ஆலோசனை பெறப்பட வேண்டும் என ஜனாதிபதியும், பிரதமரும் அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்போது, கேள்வி எழுப்பிய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, கொவிட்-19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் இறுதி சடங்கின் போது ஏன்? உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுத்தல் பின்பற்றப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து நாடாளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டது.

இந்தநிலையில் அதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், அப்போதைய நிலையை கருத்திற் கொண்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதேநேரம், இன்று சபையில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், கொவிட்-19 நோயால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் பூதவுடல்களை அவர்களின் மரபின் அடிப்படையில் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என கோரினார்.

இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வை இரண்டு மணித்தியாலங்களில் நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் நாடாளுமன்ற அமர்வு மேலும் 30 நிமிடங்களுக்கு நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.