இணையதளம் வழியே நடைபெறும் முறைகேடுகள் குறித்தும், ஆன்லைன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பெற்றோர் குழந்தைகளுக்கு விளக்கி புரியவைப்பது அவசியமானது. அதற்கான டிப்ஸ்:
ஆன்லைன் வழியே பாடம் படிக்க தொடங்கியதில் இருந்து குழந்தைகளுக்கும், இணையதளத்திற்கும் இடையேயான நெருக்கம் வெகுவாக அதிகரித்து இருக்கிறது. இணையதள வீடியோக்கள் வழியாக கல்வி சார்ந்த ஏராளமான விஷயங்களை குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். அதில் பொழுதை போக்கவும் செய்கிறார்கள். அதேவேளையில் இணையதளம் வழியே நடைபெறும் முறைகேடுகள் குறித்தும், ஆன்லைன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பெற்றோர் குழந்தைகளுக்கு விளக்கி புரியவைப்பது அவசியமானது. அதற்கான டிப்ஸ்:
பல்வேறு ஆன்லைன் தளங்கள் குழந்தைகளை எளிதாக ஈர்த்துவிடுகின்றன. அதன் பின்னணியில் குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் அம்சங் களும் இருக்கின்றன. ஆன்லைனில் நல்ல விஷயங்களை பார்க்க அனுமதிப்பதுபோல தீய விஷயங்கள் குறித்தும் குழந்தைகளுக்கு விளக்கி புரியவைக்க வேண்டும். எந்தெந்த ரூபத்தில் தீய விஷயங்கள் வெளிப்படும் என்பதையும், அதனை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதையும் பக்குவமாக புரியவைக்க வேண்டும்.
பெரும்பாலான சிறுவர்-சிறுமியர்கள் தங்கள் நண்பர்களுடன் சமூக ஊடகங்களில் அரட்டை அடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கு பெற்றோர் இடம் கொடுக்கக்கூடாது. ஆரம்பத்தில் நடக்கும் விவாதமும், இணையதள தேடல்களும் நாளடைவில் தவறான பாதைக்கு அழைத்து செல்ல வாய்ப்பிருக்கிறது. மற்றவர்களுடன் முரண்பாடான பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள இணையதளத்தை உபயோகிக்கக்கூடாது என்பதில் பிள்ளைகள் உறுதியாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்கள் வழியாக எப்படியெல்லாம் தேவையற்ற விவாதங்கள், பிரச்சினைகள் முளைக்கின்றன என்பதை பிள்ளைகளுக்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
குழந்தைகள் தங்களுடைய பாஸ்வேர்டை சமூக ஊடகங்களிலோ, நண்பர்களுடனோ பகிர்ந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது. மற்றவர்களுக்கு நம்முடைய பாஸ்வேர்டு தெரிந்துவிட்டால் என்னென்ன பிரச்சினைகளெல்லாம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை விளக்கி கூற வேண்டும். பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றுவது பற்றியும், அதனை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் புரியவைக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்கள் வழியே முன்பின் தெரியாத நபர்களுடன் பழகுவதற்கும் அனுமதிக்கக்கூடாது. குழந்தைகள் தங்களின் புகைப்படங்கள், தனிப்பட்ட அபிலாஷைகள், வசிப்பிடம் பற்றிய தகவல்களை பகிர்வதற்கும் அனுமதிக்கக்கூடாது. அதனால் என்னென்னெ பிரச்சினைகள் உருவாகும் என்பதையும் தெளிவுபடுத்திவிட வேண்டும்.
குழந்தைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்கும் கடமையும் பெற்றோருக்கு இருக்கிறது. யாராவது அருகில் வந்தால் உடனே இணைய தள பக்கத்தை மூடுவது, கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்லாதது போன்றவை பிள்ளைகள் ஏதோ தவறு செய்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாக அமையும். அதனால் இந்த விஷயத்தில் கவனத்துடனும், கண்டிப்புடனும் இருக்க வேண்டும்.
இணையதள சைபர் மிரட்டல் பற்றியும் பிள்ளைக்கு தெரியப்படுத்துங்கள். இது 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்றாகும். சைபர் மிரட்டல் என்பது கடுமையான குற்றமாகும். யாராவது மிரட்டினால் தயங்காமல் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பெற்றோர்- பிள்ளைகள் உறவு அமைய வேண்டும்.
இணையதளம் எந்த அளவுக்கு நல்ல விஷயங் களை தெரிந்து கொள்வதற்கு வழிகாட்டுகிறதோ அதற்கு இணையான தீய பக்கங்களையும் கொண்டிருக்கிறது. ஆன்லைன் மோசடிகள் ஏராளம் நடக்கின்றன. எது சரி எது தவறு என்பதை தீர்மானிக்கும் பக்குவம் கொண்டவர்களாக பிள்ளைகளை வளர்த்தெடுங்கள்.