பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது பெங்களூரா? டெல்லியா? அபுதாபியில் இன்று பலப்பரீட்சை

விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இதுவரை 54 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் 2 லீக் போட்டிகளே எஞ்சியுள்ளன. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக வாய்ப்பை இழந்தது. நேற்றைய ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.

பிளேஆப் சுற்றின் 3 இடங்களுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 4 அணிகள் போட்டியில் உள்ளன.

பிளேஆப் சுற்றுக்கு 2-வதாக நுழையும் அணி எது என்பது இன்று தெரியும்.

அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து, பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இரு அணிகளும் 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளன. தோல்வி அடையும் அணி மும்பை-ஐதராபாத் இடையே நாளை நடைபெறும் ஆட்டத்தின் முடிவை பொறுத்து தகுதி பெறும். இரு அணிகளும் கொல்கத்தாவை விட ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருப்பதால், தோற்றாலும் முன்னேறுவதற்கான நிலையில் உள்ளது.

இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டம் நாளையுடன் முடிகிறது. நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் ஐதராபாத் தோற்றால் வெளியேறும். கொல்கத்தா, பெங்களூர், டெல்லி அணிகள் தகுதி பெறும். ஐதராபாத் வெற்றி பெற்றால் அந்த அணி, இன்றைய ஆட்டத்தில் தோற்கும் அணி, கொல்கத்தா ஆகியவை 14 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும்.

நிகர ரன் ரேட் அடிப்படையில் 2 அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும். பிளேஆப் சுற்று 5-ந் தேதி தொடங்குகிறது