இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 மாதங்களுக்கு பிறகு 7 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது

இந்தியாவில் தினசரி கண்டறியப்படும் புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 77.61 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 54,366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 69.48 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 73979 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கண்டறியப்படும் புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்து வருகின்றனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,95,509 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதன்மூலம் இரண்டு மாதங்களுக்கு பிறகு (63 நாட்கள்) சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்திற்கும் கீழ் குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு 1.51 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 89.53 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.