கொரோனா காலத்தில் தேர்தல் பிரசாரம் - அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை

கொரோனா காலத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது மிகுந்த விழிப்புணர்வையும் கவனத்தையும் கடைபிடிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

கொரோனா காலத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது மிகுந்த விழிப்புணர்வையும் கவனத்தையும் கடைபிடிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேர்தல் பிரசார கூட்டங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமலும், அதிகளவில் முக கவசம் அணியாமல் தனிமனித இடைவெளியையும் பின்பற்றாமல் விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டுவது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.

இதன் மூலம் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாமல் இருப்பதோடு, தலைவர்களும், மக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் முக்கிய பங்காற்றுகின்றனர்.

எனவே கட்சியினர் தேர்தல் ஆணையத்தின் விதிகளை பின்பற்றுவது முக்கியம். விதிமுறைகளை பின்பற்றாத அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் குறித்து மிகவும் கவனமாக தேர்தல் ஆணையம் கவனித்து வருகிறது. எனவே விதிகளை கடுமையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள் மற்றும் ஏற்பட்டாளர்கள் மீது மாநில தலைமை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் உரிய பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே விதிமுறைகளை பின்பற்றுவதில் அரசியல் கட்சியினரின் ஒத்துழைப்பு தேவை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.