வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

 

வெங்காயத்தின் சில்லரை விலை ஆகஸ்டு மாத இறுதியில் இருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து வந்தது. இருப்பினும் கடந்த 18-ந் தேதி வரை, சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் விலை குறைவாக இருந்து வந்தது.

 

 

கடந்த 10 நாட்களாக வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.11.56 அதிகரித்து உள்ளது. இதனால் சில்லரை விலை கிலோவுக்கு ரூ.51.95 ஆக உயர்ந்து இருக்கிறது. இது கடந்த ஆண்டின் விலையை விட (ரூ.46.33) 12.13 சதவீதம் அதிகம் ஆகும்.

 

காரீப் பருவத்தில் சாகுபடி செய்யக்கூடிய வெங்காயம் சந்தைக்கு வருகிற வரையில், மக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்கிற விதத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தது.

 

வெங்காயத்தின் விலை ஓரளவுக்கு மிதமாக இருந்து வந்தபோதிலும், மராட்டியம், கர்நாடகம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக வளர்ந்து வருகிற காரீப் வெங்காய பயிர் மற்றும் சேமித்து வைக்கப்பட்ட வெங்காயம் சேதத்தை சந்தித்துள்ளது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது.

 

ரபி (குறுவை) பருவ வெங்காய இருப்பை மத்திய அரசு இந்த ஆண்டு அதிகளவு கைவசம் வைத்திருக்கிறது. விலையை குறைக்க ஏதுவாக, இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது பாதியில் இருந்து அளவீடு செய்யப்பட்ட முறையில் பெரிய மண்டிகளுக்கு விடுவித்து வருகிறது. இனி வரும் நாட்களில் கூடுதலாக வெங்காயம் விடுவிக்கப்படும்.

 

வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு ஏதுவாக அரசு 21-ந் தேதியன்று (நேற்று) கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இந்த கட்டுப்பாடு தளர்வுகள் டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இது உயரும் விலையை கட்டுப்படுத்தும்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.