பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொடர்பில் இலங்கை வக்ப் சபை வெளியிட்டுள்ள விடயம்
பள்ளிவாசல்களை மீளத் திறப்பது சம்பந்தமான பணிப்புரைகளை இலங்கை வக்ப் சபை வெளியிட்டுள்ளது.
இலங்கை வக்ப் சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப்பினால் இன்று அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள சகல பள்ளிவாசல்களும் வக்ப் சபையின் மறு அறிவித்தல்வரை தொடர்ந்தும் மூடப்பட்டே இருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வரையறைகளுக்கு உட்பட்டவாறு தனிநபர் தொழுகைக்காக திறக்கப்படும் என இலங்கை வக்ப் சபை அறிவித்துள்ளது.
பள்ளிவாசல்களை மீள திறப்பதற்கு முன்னர் சகல தர்மகர்த்தாக்களும் அல்லது பொறுப்புதாரிகளும் பள்ளிவாசல்களையும் அதன் வளாகத்தினையும் பொது சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின்கீழ் முழுமையாக சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.
பள்ளிவாசலினுள் நுழைவது ஒரு வாயிலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு தொழுகையாளருக்கும் இடையில் தரையில் ஒரு மீட்டர் இடைவெளியை தொழுவதற்கு அனுமதியற்ற பகுதியாக தர்மகர்த்தாக்கள் அல்லது பொறுப்பாளிகள் அடையாளமிடல் வேண்டும்.
பள்ளிவாசலின் நுழைவாயிலில் கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைய, வழமையான அல்லது விசேட கூட்டுத் தொழுகைகள் அனுமதிக்கப்பட மாட்டாது.
ஒரு நேரத்தில் 30 பேர் அல்லது அதைவிட குறைவானவர்கள் மட்டுமே தனிநபர் தொழுகைக்காக பள்ளிவாசலில் அனுமதிக்கப்படுவர்.
பள்ளிவாசலில் இருக்கின்றபோது, ஒவ்வொருவரும் முகக்கவசத்தை அணிந்திருப்பதோடு, ஒரு மீட்டர் பௌதீக இடைவெளியையும் பேண வேண்டும்.
தரைவிரிப்பு இடப்பட்டுள்ள பள்ளிவாசல்களில் அதன்மீது தொழுவது அனுமதிக்கப்பட மாட்டாது என்பதனால், தரைவிரிப்பு இல்லாத ஒரு இடத்தில் தொழுகையில் ஈடுபட வேண்டும்.
பள்ளிவாசலுக்கு செல்லும் ஒவ்வொருவரும் தம்முடைய தொழுகைக்காக, தொழுகை விரிப்பை எடுத்துச் செல்வதோடு, பள்ளிவாசலில் இருந்து வெளியேறும்போது, அதனை தம்முடன் எடுத்துச் சென்றுவிட வேண்டும்.
பள்ளிவாசல்களை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினால் கொவிட்-19 தொடர்பாக வழங்கப்படுகின்ற வழிகாட்டல்களையும், பணிப்புரைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
சுகாதாரத்துறை அல்லது பாதுகாப்புத் துறையினால் இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றபோது, இலங்கை வக்ப் சபை மேலதிக பணிப்புரைகளை வழங்கும் என இலங்கை வக்ப் சபை மற்றும் முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்துள்ளார்.