காய்ச்சல், ஜலதோஷம் போல் கொரோனா பாதிப்புகள் மீண்டும் ஏற்பட வாய்ப்பு - இங்கிலாந்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை

காய்ச்சல், ஜலதோஷம் போல் கொரோனா பாதிப்புகள் மீண்டும் ஏற்பட வாய்ப்பு - இங்கிலாந்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்த பின்னர் மீண்டும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் அதிகரித்துள்ள சூழலில் அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.  எனினும் இதில் முழுமையான பலன் எட்டப்படவில்லை.  பரிசோதனை அளவிலேயே இந்த முயற்சிகள் உள்ளன.

 

இந்த நிலையில், கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்த பின்னர் மீண்டும் அதன் பாதிப்புகள் ஏற்பட கூடிய ஆபத்துகள் உள்ளன என இங்கிலாந்து நாட்டு அரசின் மூத்த அறிவியல் ஆலோசகர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

 

 

இதுபற்றி இங்கிலாந்து அரசின் அவசரகால அறிவியல் ஆலோசனை குழு வெளியிட்டுள்ள ஆவணங்களின்படி, கொரோனா வைரசானது பரவி வரும் நிலையில், ஒருவருக்கு பாதிப்புகள் மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஒவ்வொரு தொற்றுக்கும் இடையேயான காலஇடைவெளி என்பது குறைந்த அளவில் இருக்கலாம்.  எந்த நிலையில், குணமடைந்த நபர்கள் மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்தில் செல்கின்றனர் என்பது தெளிவாக தெரியவரவில்லை.

 

ஆனால், புளூ காய்ச்சல் மற்றும் பொதுவான ஜலதோஷம் போன்றவற்றை ஏற்படுத்தும் பிற கொரோனா வைரசுகளை மனிதர்கள் எதிர்கொள்வது போன்று கோவிட்19 வைரசும் மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய வாய்ப்பு நீடித்திருக்கிறது என்று தெரிவித்து உள்ளது.