பெங்களூருவில் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 43 பேர் பலி

பெங்களூருவில் மற்ற நோய்த்தொற்று இல்லாததுடன், அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 43 பேர் பலியான பரிதாபம் நடந்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது. பெங்களூருவில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 88 ஆயிரத்து 831 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 3,390 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் வரை பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் பற்றியும், அதற்கான காரணம் குறித்தும் மாநகராட்சி சார்பில் நிபுணர்கள் குழுவால் ஆய்வு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் வரை கொரோனாவுக்கு 2,316 பேர் பலியாகி இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனாவுடன், இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட உடல் நலக்குறைவாக அவதிப்பட்டு இருந்ததால் உயிர் இழந்தது தெரியவந்து உள்ளது. அதே நேரத்தில் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகளுடன் பாதிப்புக்கு உள்ளானவர்கள் 620 பேரும் தங்களது உயிரை பறி கொடுத்திருந்தனர்.

ஆனால் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல், மற்ற நோய்கள், உடல் நலக்குறைவு எதுவும் இல்லாமலும் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 43 பேர் பரிதாபமாக உயிர் இழந்திருப்பதும் தெரியவந்துள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று டாக்டர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 43 பேர் பலியாகி இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள், தாமதமாக சிகிச்சை பெற வருவதும் உயிர் இழப்பு ஏற்பட முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. இதனால் கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுவதற்கு முன்வர வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.