
விடுமுறை தினமான நேற்று பொழுதை கழிக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி பொதுமக்கள் நுழைந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை பகுதியில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் அவ்வப்போது பொதுமக்கள் தடையை மீறி கடற்கரை மணற்பரப்பில் உலா வருவது தொடர்கதையாகி இருந்து வந்தது. இதையடுத்து மெரினா காமராஜர் சாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்கு செல்லும் அனைத்து இணைப்பு சாலைகளும் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டன. தடையை மீறி கடற்கரையில் சுற்றுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் பட்டினப்பாக்கம் பகுதி மக்கள் மட்டும் மாலை நேரங்களில் கடற்கரை பகுதிகளில் கூடி பொழுதை கழித்து வந்தனர். பலர் இரவில் கடற்கரை மணற்பரப்பிலேயே படுக்கை விரித்து உறங்கியும் வந்தனர்.
இந்தநிலையில் விடுமுறை தினமான நேற்று மெரினா கடற்கரைக்கு ஏராளமானோர் படையெடுத்தனர். பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட் வழியாக கடற்கரை மணற்பரப்பில் ஊடுருவி சுற்றி திரிந்தார்கள். பலர் குடும்பம் குடும்பமாக அமர்ந்து பேசியும், அலைகளில் துள்ளி விளையாடி மகிழ்ந்தும் பொழுதை போக்கினர். மீன் வாங்க வந்தோர் பலரும் கடற்கரை மணற்பரப்பில் உலா வந்தனர்.
இந்த தகவல் அறிந்தும் போலீசார் அந்த பகுதியில் விரைந்தனர். மணற்பரப்பில் சுற்றி திரிந்தோரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ‘கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த பகுதியில் மக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஒத்துழைப்பு தராவிட்டால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’, என்று எச்சரித்து அனுப்பினர். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து வேகவேகமாக புறப்பட்டு சென்றனர்.
அதேபோல பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டுக்கு வரும் மக்கள் மீன்கள் வாங்கி செல்லாமல் கடற்கரையில் நுழைந்தால் உடனடியாக அரசின் நடவடிக்கை குறித்து தெரியப்படுத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட வேண்டும் என்றும், கடற்கரையில் மக்களை அனுமதிக்க விடக்கூடாது என்றும் மீன் வியாபாரிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர். மேலும் மீன் மார்க்கெட் பகுதியில் கூடுதலாக தடுப்புகளும் அமைத்தனர்.