சபரிமலை கோவிலில் தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க கேரள மந்திரி சபை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா இல்லை சான்றிதழ் கட்டாயத்துடன் தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்்கு பூஜையை தவிர ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6 மாதங்களாக பக்தர்கள் இன்றி சபரிமலை கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சிறப்பு பூஜை எதுவும் நடைபெறாது. 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த மாதம் நடைபெறும் பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில், சபரிமலையில் ஐப்பசி மாத பூஜையில் பக்தர்களை அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி ஆன்லைன் முன்பதிவு மூலம் தினசரி 250 பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயமாக கொண்டு வர வேண்டும். அதே நேரத்தில் மற்ற கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.