கம்பஹாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! சுகாதார அமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்
கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்ப்டுள்ள கம்பஹா மாவட்டத்தில் தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்காக அம்பியூலன்ஸ் வண்டிகளை அனுப்பிய போதும் அவர்கள் அங்குச் செல்வதை நிராகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதும். சுகாதார அமைச்சு அந்த மாவட்டத்தில் PCR பரிசோதனைகளை நடத்தி வருகிறது.
இதன் போது நோயாளிகள் என அடையாளம் காணப்பட்டவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல, அவர்களின் வீடுகளுக்கு அம்பியூலன்ஸ் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் சிலர் சிகிச்சை நிலையங்களுக்கு செல்வதை நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை மக்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக கவனத்தில் கொண்டு, சுகாதார அமைச்சு வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் அம்பியூலன்ஸ் மூலம் சிகிச்சை நிலையங்களுக்கு செல்லுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நோயாளிகளான மக்களிடம் தயவுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிகிச்சைக்கு செல்லாது நிராகரிப்பது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்பதால், நிராகரிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்க நேரிடும் எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.