50 வருஷத்துல பூமி எவ்ளோ மாறியிருக்கு தெரியுமா? ரகசியங்களை உடைக்கும் நாசாவின் 'லேண்ட்சாட்'

50 வருஷத்துல பூமி எவ்ளோ மாறியிருக்கு தெரியுமா? ரகசியங்களை உடைக்கும் நாசாவின் 'லேண்ட்சாட்'

பூமி எவ்வாறு மாறிவருகிறது என்பதை விண்வெளியில் இருந்து துல்லியமாகக் கண்காணிக்கும் 'லேண்ட்சாட்' திட்டத்திற்காக, புதிய அறிவியல் ஆராய்ச்சிக் குழுவை நாசா மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இணைந்து அறிவித்துள்ளன.

நமது பூமி கடந்த 50 ஆண்டுகளில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்று பார்க்க ஆசையா? காடுகள் மறைந்தது முதல், நகரங்கள் வளர்ந்தது வரை அனைத்தையும் துல்லியமாகப் பதிவு செய்து வரும் நாசாவின் 'லேண்ட்சாட்' (Landsat) திட்டம் இப்போது அடுத்த கட்டத்திற்குத் தயாராகிவிட்டது. இதற்காக ஒரு புதிய 'சூப்பர்' விஞ்ஞானிகள் குழுவை நாசா களமிறக்கியுள்ளது!

1972-ம் ஆண்டு முதல் இன்று வரை, ஒரு நாள் கூட இடைவெளியின்றி பூமியை மேலிருந்து கண்காணித்து வரும் ஒரே திட்டம் லேண்ட்சாட் தான். இது ஏதோ சோதனை முயற்சி அல்ல; பூமியின் வரலாற்றை எழுதும் ஒரு 'டிஜிட்டல் டைரி'. இது காடுகள், விவசாய நிலங்கள், பனிப்பாறைகள், ஆறுகள் என ஒவ்வொன்றை தொடர்ந்து படம் பிடித்து வருகிறது. பல தசாப்த காலத் தரவுகளை இது வைத்திருப்பதால், காலநிலை மாற்றத்தை (Climate Change) ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு இது ஒரு 'தங்கச் சுரங்கம்' போன்றது.

நாசா மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இணைந்து தேர்ந்தெடுத்துள்ள இந்தப் புதிய குழுவில், விவசாயம், நீர்நிலை மற்றும் காலநிலை மாற்ற நிபுணர்கள் உள்ளனர். விண்வெளியில் இருந்து எடுக்கும் படங்களில் இருக்கும் தூசி, மேகங்கள் மற்றும் பனிமூட்டத்தைச் சரிசெய்து, படங்களை மிகத் தெளிவாக மாற்றும் வித்தையை இவர்கள் செய்வார்கள்.

ஐரோப்பாவின் சென்டினல்-2 உள்ளிட்ட பிற நாட்டுச் செயற்கைக்கோள்களுடன் லேண்ட்சாட்டை இணைத்து, உலகையே ஒரே அமைப்பாகக் கண்காணிக்கும் முயற்சியில் இவர்கள் இறங்கியுள்ளனர். முன்பை விட இப்போது பூமி மிக வேகமாக மாறி வருகிறது. காட்டுத்தீ, பயிர் பாதிப்பு, நீரின் தரம் குறைதல் எனப் பல சவால்களை நாம் எதிர்கொள்கிறோம்.

இத்தகைய மாற்றங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, சரியான முடிவுகளை எடுக்க லேண்ட்சாட் வழங்கும் நீண்டகாலத் தரவுகள் மிகவும் அவசியம். லேண்ட்சாட் இல்லையென்றால், பல சுற்றுச்சூழல் ஆய்வுகள் பாதியிலேயே நின்றுவிடும். புதிதாக அமைந்துள்ள இந்தக் குழு 2026 முதல் 2030 வரை லேண்ட்சாட் திட்டத்தை வழிநடத்தும். பூமியின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான முக்கியத் தரவுகளை இந்த 4 ஆண்டுகளில் இவர்கள் உலகிற்கு வழங்குவார்கள்.