முதன்முறையாக நீருக்கு அடியில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி: விண்வெளி ஆய்வில் இந்தியாவின் அடுத்த பாய்ச்சல்
இந்தியாவின் மனித விண்வெளிப் பயணக் கனவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், நாட்டின் விண்வெளித் துறை ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று, விண்வெளி வீரர்களுக்குத் தண்ணீருக்கு அடியில் பயிற்சி அளிப்பதற்கான அதிநவீன உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.
விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்கள், அங்கே புவி ஈர்ப்பு விசை இல்லாத மிதக்கும் சூழலில் (Microgravity) எப்படித் தங்களின் அன்றாட வேலைகளை செய்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? விண்கலத்திற்கு வெளியே வந்து ஆபத்தான விண்வெளி நடை பயணம் (Spacewalk) செய்ய அவர்களுக்கு எப்படித் தைரியமும் பயிற்சியும் கிடைக்கிறது? இதற்கெல்லாம் விடை தேடி, விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் முன்பாக, அவர்களை அப்படியே கடலுக்கு அடியில் தூக்கிப் போடத் தயாராகி வருகிறது இந்திய நிறுவனம்.
இந்தியாவின் மனித விண்வெளிப் பயணக் கனவுகளுக்குப் பக்கபலமாக, 'ஆகா ஸ்பேஸ்' (Aaka Space) என்ற இந்திய விண்வெளித் துறை ஸ்டார்ட்-அப் நிறுவனம், இந்தியாவின் முதல் நீருக்கடியிலான விண்வெளித் தற்காலிக வாழ்விடப் பயிற்சித் திட்டத்தை உருவாக்கப் போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகிலேயே விண்வெளிச் சூழலை அப்படியே பிரதிபலிக்கக்கூடிய ஒரே இடம் தண்ணீருக்கு அடியில் மட்டும்தான். விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாததால், விண்வெளி வீரர்களின் உடல் சமநிலை மாறும், நடமாட்டம் கட்டுப்படும். அதேபோல, ஒரு சிறிய விண்கலத்திற்குள் பல மாதங்கள் அடைபட்டு கிடப்பதால் கடுமையான மன அழுத்தமும் தனிமையும் ஏற்படும். இதனை அப்படியே பூமியில் செயற்கையாக உருவாக்க விஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்ததுதான் 'நீருக்கடியிலான வாழ்விடம்' (Underwater Habitat). தண்ணீருக்கு அடியில் இருக்கும் 'நியூட்ரல் பயான்சி' (Neutral buoyancy) என்ற மிதப்பு விசைச் சூழல், விண்வெளி வீரர்களுக்கு விண்வெளியில் மிதப்பது போன்ற அதே உணர்வைத் தரும்.
சமீபத்தில் விண்வெளிக்குச் சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா கூட, விண்வெளியில் உடலைத் சமநிலைப்படுத்துவது எவ்வளவு சவாலானது என்பதைப் பகிர்ந்துள்ளார். அவர்களுக்குப் பயிற்சியளிக்கவே இந்தத் தளம் தயாராகிறது. இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையமான ‘பாரதிய அந்தரிக்ஷ் ஸ்டேஷன்’ (Bharatiya Antariksh Station) மற்றும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருகிறது. இத்தகைய சூழலில், நிலவுக்கோ? செவ்வாய் கிரகத்திற்கோ? செல்லும் விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் இதயச் செயல்பாடு மாற்றங்கள், தூக்கச் சுழற்சி பாதிப்பு, கார்பன்-டை-ஆக்சைடு அதிகரிப்பு போன்ற ஆபத்துகளை இந்த நீருக்கடியிலான தளத்தில் முன்கூட்டியே ஆராய முடியும்.
முதற்கட்டமாக, திறந்த கடலில் இறங்குவதற்கு முன்பாக, பாதுகாப்பான ஒரு கட்டுப்படுத்தப்பட்ட நீர்ச் சூழலில் (Controlled water environment) இந்த ஆய்வு இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கவுள்ளது. விண்வெளிச் சூழலை பூமியில் உருவாக்குவதில் 'ஆகா ஸ்பேஸ்' நிறுவனத்திற்கு இது முதல் முறையல்ல. ஏற்கனவே லடாக்கின் மிக உயரமான, கடுமையான குளிர்கொண்ட மலைப்பகுதியில் செவ்வாய் கிரகம் போன்ற சூழலை உருவாக்கி விண்வெளி வீரர்களுக்கான தற்காலிக வாழ்விட பரிசோதனை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். செவ்வாய் கிரகத்தின் ஆபத்தான கதிர்வீச்சில் இருந்து மனிதர்களைப் பாதுகாக்கும் ஆசியாவின் முதல் '3D-பிரிண்டட் கதிர்வீச்சுக் கேடயத்தை' செவ்வாய் கிரகப் பாறைத் துகள்களைக் கொண்டு தயாரித்துச் சாதனை படைத்துள்ளனர்.
இந்த நீருக்கடியிலான அதிநவீனத் தளத்தில் இந்திய விண்வெளி வீரர்களுக்கு (Gaganyaan Astronauts) நேரடியாகப் பயிற்சி அளிப்பது குறித்து இஸ்ரோ (ISRO) அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்தவுடன், இந்திய விண்வெளி வீரர்கள் கடலுக்கு அடியில் விண்வெளிப் பயிற்சியைத் தொடங்குவார்கள். இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படும் பட்சத்தில், விண்வெளி ஆய்வுக்காக நீருக்கடியிலான பிரத்யேகப் பயிற்சித் தளங்களைக் கொண்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா போன்ற உலகின் ஒரு சில முன்னணி நாடுகளின் அதிமுக்கியப் பட்டியலில் இந்தியாவும் கெத்தாக இணையப் போகிறது.