அறிவியல் சுற்றுவட்டப்பாதையில் அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது

அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் அறிவியல் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இதையடுத்து, அந்த விண்கலம் கிரகத்தில் நில அதிர்வு ஏற்பட்ட பகுதியை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரக பயண திட்ட இயக்குனர் ஒமரான் ஷரப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

 


அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் வெற்றிகரமாக ‘சயின்ஸ் ஆர்பிட்’ எனப்படும் அறிவியல் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது. இதற்காக அந்த விண்கலத்தில் உள்ள 6 திரஸ்டர் என்ஜின்கள் 8.36 நிமிடங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இயக்கப்பட்டது.

அந்த நிமிடங்கள் மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஒருவேளை அந்த நேரத்தில் சரியாக திரஸ்டர்கள் இயக்கப்படவில்லை என்றால் விண்கலம் விண்வெளியில் தொலைந்து போகக்கூடும் சூழ்நிலை இருந்தது. இந்த திசை திருப்பும் முயற்சியில் கடைசியாக என்ஜின் இயக்கப்பட்டது மிகவும் சவாலானது. ஆனால் வெற்றிகரமாக செவ்வாயின் அறிவியல் சுற்றுவட்டப்பாதையை ‘ஹோப்’ விண்கலம் அடைந்தது சாதனைக்குரியது.

அந்த விண்கலம் தற்போது ஏற்கனவே பயணம் செய்து கொண்டு இருந்த பிடிப்பு சுற்றுவட்டப்பாதையில் (கேப்சர் ஆர்பிட்) 1,063 கி.மீ-ல் இருந்து அதிகபட்சமாக 42 ஆயிரத்து 426 கி.மீ தொலைவில் பயணம் செய்து வந்தது. அறிவியல் சுற்றுவட்டப் பாதையில் நகர்ந்து கொண்டு இருக்கும் ‘ஹோப்’ விண்கலம் குறைந்தபட்சமாக 20 ஆயிரம் கி.மீ தொலைவில் இருந்து அதிகபட்சமாக 42 ஆயிரத்து 461 கி.மீ தொலைவில் பயணம் செய்து ஆய்வு செய்ய உள்ளது.

அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந் தேதி முதல் பல்வேறு அறிவியல் ஆய்வுகளை ‘ஹோப்’ விண்கலம் தொடங்க உள்ளது. அறிவியல் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்துள்ள ‘ஹோப்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு ஏற்பட்ட ‘செர்பெரஸ் போசே’ என்ற பகுதியை மிக தெளிவாக படம் பிடித்து விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பியுள்ளது.

இந்த படத்தில் நில அதிர்வு ஏற்பட்ட பகுதியானது விரிசல் விட்டது போன்று கோடுகளாக காட்சியளிக்கிறது. அறிவியல் சுற்றுவட்டப்பாதையில் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு தகவல்களை ‘ஹோப்’ விண்கலம் சேகரிக்க உள்ளது. இந்த விண்கலம் சேகரிக்கும் தகவல்கள் அனைத்தும் வரும் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் பகிர்ந்து அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.