சென்னைக்கு சறுக்கல் ஏற்பட்டது எங்கே?: ஐதராபாத்துக்கு எதிரான தோல்வி குறித்து ஒரு பார்வை

பிரியம் கார்க் அரைசதம் அடித்ததும், சாம் கர்ரன் ஒரே ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்ததும் சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக போட்டியில் சிஎஸ்கே 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

 

இந்த போட்டியில் எங்கெல்லாம் சிஎஸ்கே அணிக்கு சறுக்கல் ஏற்பட்டது என்பதை பார்ப்போம்.

 

வார்னர் டாஸ் வென்றதும் பேட்டிங் தேர்வு செய்தார். அப்போது டோனி கூறும்போது நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம் என்றார். அப்போதே 150 ரன்களுக்கு மேல் கொடுத்து விட்டால் சேஸிங் செய்வது கடினம் என்பதை டோனி தெளிவாக புரிந்து கொண்டார்.

முதல் 11 ஓவரை வரை போட்டி சென்னை கைக்குள்தான் இருந்தது. சாவ்லா வீசிய அந்த ஓவரில் வார்னேர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 9 ரன்னில் வெளியேறினார். அப்போது ஐதராபாத் 11 ஓவரில் 69 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

 

5-வது விக்கெட்டுக்கு பிரியம் கார்க் உடன் அபிஷேக் சர்மா ஜோடி சேர்ந்தார். பிரியம் கார்க்கிற்கு 19 வயதே  ஆகிறது. 20 வயதே ஆகிறது. அனுபவம் வாய்ந்த சென்னை வீரர்களை இந்த இளம் ஜோடி எப்படி எதிர்கொள்ளப் போகிறது. ஐதராபாத் 125 ரன்னைத் தாண்டுவது கடினம் என்ற நிலை இருந்தது.

 

பிரியம் கார்க் - அபிஷேக் சர்மா ஜோடி 14-வது ஓவரில் இருந்து சார்ஜ் எடுத்தது ஜடேஜா வீசிய அந்த ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்ததால் இளம் ஜோடிக்கு நம்பிக்கை கிடைத்தது. அடுத்த ஓவரில் 9 ரன்கள் அடித்தனர்.

 

17-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் 3 பவுண்டரி, ஒர சிக்ஸ் விளாசினார் பிரியம் கார்க். ஒரே ஓவரில் 22 ரனகள் விட்டுக்கொடுக்க சென்னை அணியிடம் இருந்து போட்டி மெதுவாக சன்ரைசர்ஸ் கைக்குச் சென்றது.

 

தீபக் சாஹர் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் அபிஷேக் சர்மா முதல்  பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்தார். ஜடேஜா அதை தவறவிட்டதும், பந்து பவுண்டரிக்கு சென்றது. அடுத்த பந்தில் ஷர்துல் தாகூர் கேட்ச் விட்டார். 2 பந்தில் 2 கேட்ச் தவற ஐந்து ரன்கள் சென்றது. கேட்ச் மிஸ்சிங் காரணமாக தீபக் சாஹர் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 48 பந்தில் 77 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது. 

 

சாம் கர்ரனின் ஒரு ஓவர், இரண்டு கேட்சி மிஸ்சிங், பிரியம் கார்க் 26 பந்தில் 51 ரன்கள் விளாசியது, சன்ரைசர்ஸ் ஐதராபாத் 164 ரன்கள் அடிக்க முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

 

பேட்டிங் செய்யும்போது 3-வது ஓவரில் வாட்சன் 1 ரன்னில் அவுட்டாகி சரிவை தொடங்கி வைத்தார். 6-வது ஓவரை டி நடராஜன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் அம்பதி ராயுடு ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் டு பிளிஸ்சிஸ் ரன் அவுட் ஆக ஒட்டுமொத்த போட்டியும் 6 ஓவருக்குகள் முடிந்த நிலை ஏற்பட்டது.

 

16 ஓவர் வரை ஜடேஜா 25 பந்தில் 23 ரன்களும், டோனி 27 பந்தில் 24 ரன்கள் என மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இருவரும் 52 பந்தில் 47 ரன்களே அடித்தனர்.

 

17-வது ஓவரில் இருந்து ஜடேஜா சார்ஜ் எடுத்தார். அந்த ஓவரில் 3 பவுண்டரி, 18-வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என 34 பந்தில் அரைசதம் அடித்தார். 35-வது பந்தில் ஆட்டமிழந்தார். 11 பந்தில் 25 ரன்கள் அடித்தார்.

 

17.5 ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை டோனி 9 பந்தில் இரண்டு பவுண்டரி,  ஒரு சிக்சர் மட்டுமே அடித்தார். இதுவும் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. சாம் கர்ரன் ஐந்து பந்தில் 15 ரன்கள் எடுத்துக் கூட பயனில்லாமல் போனது.