20ம் திருத்தச் சட்டமூல விவகாரம்- திங்கள் வரை பிற்போடப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள்
அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9 மணிவரை பிற்போடப்பட்டுள்ளன.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியர்களான புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்று, ப்ரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவர் கொண்ட ஆயம் முன்னிலையில், நேற்று மூன்றாவது நாளாகவும், குறித்த மனுக்கள் மீதான பரிசீலனைகள் இடம்பெற்றன.
20ம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 39 மனுக்களில் 37 மனுக்கள் தொடர்பிலும், 17 இடையீட்டு மனுக்கள் தொடர்பிலும் நேற்றைய தினம் சமர்ப்பணங்கள் நிறைவடைந்ததாக, நீதிமன்றத்திற்கான எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
சட்டமா அதிபர் தப்புல டி லிவேறாவின் சமர்ப்பணங்கள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மேலதிக சமர்ப்பணங்கள் நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மனுக்கள் மீதான நேற்றைய பரிசீலனைகளின்போது, இடையீட்டு மனுவை சமர்ப்பித்திருந்த அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன சமர்ப்பணம் முன்வைத்தார்.
அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச்சட்டமூலம் அரசாங்கத்தினால் தன்னிச்சையாக முன்வைக்கப்பட்ட சட்டமூலம் அல்லவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
19 வது திருத்தச்சட்டம், பொதுமக்கள் அபிப்பிராயம் இன்றி நிறைவேற்றப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, அவ்வாறு இருக்கையில் 20 ஆம் திருத்தச்சட்டமூலம் பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு விடப்பட வேண்டும் என கூறப்படுவது தர்க்க ரீதியானது அல்லவெனவும் தெரிவித்துள்ளார்.
20 ஆம் திருத்தச்சட்ட மூலம் அரசியலமைப்பின் அடிப்படைகளுக்கு முரணான வகையில் முன்வைக்கப்பட்டுள்ளது என இந்த பரீசீலனைகளின் போது ஜனாதிபதி சட்டத்தரணிகள் பலர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
எனினும் இலங்கைக்கு மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்திய 13 வது திருத்தச்சட்டம் போன்ற மிக முக்கிய அரசியலமைப்பு திருத்தம் கூட பொதுமக்கள் அபிப்பிராயம் இன்றி நிறைவேற்ற முடியும் என வரலாற்றில் உயர் நீதிமன்றத்தின் மூலமாக தீர்மானிக்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், 20 ஆம் திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு பொதுமக்கள் அபிப்பிராயம் ஒருபோதும் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.