
தெல்லிப்பளை வைத்தியசாலை விவகாரம் : மத்திய அரசின் தீர்மானத்தில் சந்தேகம் – சத்தியலிங்கம் !
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் கீழ் இயங்கும் புற்றுநோய் மற்றும் உளநல வைத்திய சிகிச்சை பிரிவுகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கு எடுக்கும் முயற்சியானது மத்திய அரசின்மீது சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இயங்கிக்கொண்டிருக்கும் புற்றுநோய் வைத்திய சிகிச்சைபிரிவு மற்றும் உளநல வைத்தியப்பிரிவினை, மத்திய அரசின் கீழ் எடுப்பதற்கான ஒரு கலந்துரையாடல் ஆளுனர் தலைமையில் யாழில் இடம்பெற்றுள்ளது.
அதனை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்து யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது.
இவை மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையினுடைய இரு விசேட பிரிவுகளாக இருக்கிறது.
இதனை திடீர் என்று மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சி எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையானது அதிகாரப் பரவல் நோக்கிய முதலாவது படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
அந்தவகையில் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பகிர்வை மீண்டும் மத்திய அரசு பறிக்கும் முயற்சியாகவே இதனை பார்க்க முடியும்.
போதனா வைத்தியசாலைகளும் விசேட தேவையின் கீழ் உருவாக்கப்பட்ட வைத்தியசாலைகளையும் தவிர ஏனைய அனைத்து சிகிச்சை நிலையங்களும் மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இருக்கவேண்டும் என்று 13ஆவது திருத்தத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை இரண்டும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் கீழ் இயங்கும் விசேட பிரிவுகளே தவிர தனியான வைத்தியசாலைகள் அல்ல.
இதேவேளை வடக்கில் யாழ்.மாவட்டத்தினை தவிர ஏனைய நான்கு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளையும் மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் நம்பகமாக அறிகிறோம்.
இவ்வாறான செயற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்தவேண்டும். இதற்கு எதிராக நிச்சயம் நாங்கள் குரல் கொடுப்போம்” என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.