
விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – நாமல் ராஜபக்ஷ கருத்து!
தற்போதைய கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, பாடசாலைகளில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிள்ளைகள் விளையாடுவதால் கல்வி கற்க முடியாது என்றதொரு கருத்து பெரும்பாலான பெற்றோர்களிடத்தில் நிலவுகின்றது. அதேபோன்று மறுபக்கம் இன்றைய கல்வி முறைமைக்குள் மாணவர்கள் மைதானத்திற்குச் சென்றால் மேலதிக வகுப்புகளுக்குச் செல்ல முடியாது என்பதுதான் யதார்த்தம். இதற்காக பெற்றோர்களைக் குறை கூறுவதில் நியாயமில்லை. ஏனெனின் நாட்டில் காணப்படும் கல்வி முறைமைக்கு அமைய, போட்டி மிக்க பரீட்சை முறைமைக்கு அமைய அதனை எதிர்கொள்ளும் வகையில் பெற்றோர் பிள்ளைகளை வழிநடத்துகின்றனர். ஆனால், தற்போது கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் நாட்டில் காணப்படும் கல்வி முறைமை மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்த கவனம் செலுத்தியுள்ளது மாத்திரமல்ல, ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுசென்றுள்ளார். கல்வி முறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றம் குறித்து பொது மக்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கை முதலில் கேகாலையில்தான் ஆரம்பமாகுமென நினைக்கின்றேன். அத்துடன், 25 விளையாட்டுத்துறை சார்ந்த பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவுள்ளோம். இந்த 25 பாடசாலைகளிலும் தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி நிலையங்களை அமைத்து அவற்றுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு நவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.