இலங்கையில் ஒரே நாளில் 12,000 மின்தடைகள் ; ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பணிக்கு சமுகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிறுவனங்களின் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்சார சபை ஊழியர்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையினால் நாட்டின் பல பகுதிகளில் நேற்று (10) நாடளாவிய ரீதியில் 12,000க்கும் அதிகமான மின் தடைகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அநுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் தடைகளால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையே இந்த நிலைமைக்கு காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரத்தை மீண்டும் வழங்குவதற்காக தொழில்நுட்பக் குழுக்கள் பணியாற்றி வருவதாகவும், ஆயிரக்கணக்கான வீடுகள் தொடர்ந்தும் இந்த மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.