தம்பகாமம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட என்புக் கூடு அடையாளம் காணப்பட்டது

தம்பகாமம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட என்புக் கூடு அடையாளம் காணப்பட்டது

பளை - தம்பகாமம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட என்புக் கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக காணாமல் போயிருந்த 58 வயதுடைய வடமராட்சிக் கிழக்கு செம்மாபியன்பற்று தெற்கு மாமுனை சந்தியை சேர்ந்த சுந்தர மூர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் அணிந்திருந்த உடையின் அடிப்படையில் அவரது மகள் இன்று கிளிநொச்சி பதில் நீதவான் முன்னிலையில் அவரை அடையாளம் காட்டினார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

பல நாட்களுக்கு முன் குறித்த நபர் காணாமல் போயிருந்ததாகவும் அவரை அவரது உறவுகள் தேடியும் காணாத நிலையில் நேற்றைய தினம் ஆடுகளுக்கு குழை வெட்டச் சென்ற ஒருவர் குறித்த நபரது உடல் பாகங்களை கண்டு கிராம சேவகரூடாக பளை பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பளை பொலிஸ் பொறுப்பதிகாரி குலரத்ன, குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஜெயதுங்க ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், உடற் கூற்று ஆய்வுகளை கிளிநொச்சி மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி பார்வையிட்ட பின்னர் இறந்தவரின் உறவினர்கள் மூலம் ஆள் அடையாளம் உறுதி செய்யப்பட்டது.

பின்னர் மனித எச்சங்கள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.