நுவரெலியா செல்லும் பயணிகளுக்கான எச்சரிக்கை! -
கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணிக்கின்ற பேருந்துகளில் பயணிகளுக்கு அதிக போதை ஊட்டக்கூடிய மாத்திரைகளை கொடுத்து மயங்கச் செய்து அவர்களின் பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையடிக்கின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணிக்கின்ற சில பேருந்துகளில் சில பயணிகளை ஏமாற்றி அவர்களுக்கு அதிக போதை ஊட்டக்கூடிய மாத்திரைகளை உணவுடனும் குடி நீருடனும் கொடுத்து அவர்களை மயங்கச் செய்து அவர்கள் நித்திரையாகிய பின்பு அவர்களிடம் உள்ள பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பித்துச் செல்லும் நபர்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது திட்டமிட்ட அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
கடந்த 27 ஆம் திகதி கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பாதிரியார் ஒருவர் இந்த மோசமான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதுடன் இவர் அன்றைய தினம் அதாவது 27 ஆம் திகதி இரவு மயங்கிய நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிடுகின்றார்.
கொழும்பில் இருந்து ஹட்டன் வழியாகவும் கொழும்பில் இருந்து கண்டி வழியாகவும் நுவரெலியா நோக்கி பயணிக்கும் பேருந்துகளிலேயே இந்த சம்பவம் அதிக அளவில் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறுவதாக தெரியவருகின்றது.
இந்த சம்பவமானது தனியார் அரச பேருந்துகளில் திட்டமிடப்பட்ட குழுவினரால் அல்லது நபர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்ட்ட 8 பேர் கடந்த வாரங்களில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த விசேட வைத்தியர் மேலும் தெரிவிக்கின்றார்.
குறித்த திட்டமிட்ட குழுவினரால் வழங்கப்படுகின்ற அதிக சக்திவாய்ந்த போதை பொருள் காரணமாக இதனை உட்கொள்கின்ற நபர்கள் சுமார் 72 மணித்தியாலங்கள் சுய நினைவை இழப்பதாகவும் அவர்களுடைய மனநிலை மாற்றமடையவதாகவும் அந்த விசேட வைத்தியர் இது தொடர்பாக குறிப்பிடுகின்றார்.
நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடந்த 27 ஆம் திகதி இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்த ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத பாதிரியார் ஒருவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
தான் கொழும்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இரண்டாம் நிலை பாதிரியாராக சேவை செய்து வருவதாகவும் நுவரெலியாவில் அமைந்துள்ள தங்களுடைய கிறிஸ்தவ தேவாலயத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றுவதற்காக கடந்த 26 ஆம் திகதி பகல் 1.00 மணியளவில் அரசாங்க பேருந்து ஒன்றில் கொழும்பில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்ததாகவும் மிகவும் குழப்பமடைந்த நிலையில் பயணி ஒருவர் பேருந்தில் வேறு ஆசனங்கள் இருந்த பொழுதும் தனது இருக்கைக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டு தானும் நுவரெலியாவிற்கு பயணம் செய்வதாகவும் கூறினார்.
பயணத்தின் இடை நடுவில் குறித்த அந்த நபர் தன்னிடம் இருந்த எல்லு உருண்டைகளை தான் மிகவும் ரசித்து உண்ண ஆர்ம்பித்தார்.அதே நேரம் என்னிடமும் ஒரு சில எல்லு உருண்டைகளை கொடுத்து உண்ணுமாறு கூறினார்.நான் பிறகு அதனை உட்கொள்வதாக கூறி எனது கைப்பையில் வைக்க முற்பட்ட பொழுது அவருடைய வற்புறுத்தல் காரணமாக நான் அதனை உட்கொண்டேன்.எனக்கு நிட்டம்புவை நெருங்கும் பொழுது எனது சுய நினைவை இழந்ததாக நான் நினைக்கின்றேன்.
இதனை தொடர்ந்து எனக்கு 28 ஆம் திகதி நுவரெலியா வைத்தியசாலையில் வைத்தே சுய நினைவு திரும்பியது. தான் ஒரு பாதிரியார் என்பதை புரிந்து கொண்ட அவன் என்னிடம் எதனையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவன் நுவரெலியா தொடர்பாக நன்கு அறிந்து வைத்திருந்தான் எனவும் அவனை மீண்டும் ஒரு முறை கண்டால் தன்னால் அடையாளம் காண முடியும் எனவும் அந்த பாதிரியார் குறிப்பிடுகின்றார்.
மேலும் அரசாங்கமும் பொலிஸாரும் இது தொடர்பாக மக்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தனியார் அரச பேருந்துகளின் நடத்துனர்கள் மற்றும் அதிகாரிகளும் அதிக கவனத்துடன் செயற்பட முன்வரவேண்டும் இல்லாவிட்டால் இந்த நிலைமை ஏனைய பகுதிகளிலும் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.