மீண்டும் வடக்கில் பழைய நிலைமை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும்- பிரதமர்

மீண்டும் வடக்கில் பழைய நிலைமை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும்- பிரதமர்

நாட்டில் அசாதாரன நிலை ஏற்படும் வகையில் மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

திலீபனின் நினைவேந்தலுக்கு அனுமதிக்க கோரி வடக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்கிறது? கடந்த காலம் போன்றதொரு நிலை மீண்டும் ஏற்படுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த காலத்தில் ஏற்பட்ட நிலைமை மீண்டும் ஏற்படாது.

நாடு பாதுகாப்பாக உள்ளது. பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம்.

ஆனால், மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும்.

இதேவேளை சட்டவிரோத மீனவ பிரச்சினையை இந்திய பிரதமரிடம் முன்வைத்துள்ளோம்.

நாடு என்ற ரீதியில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாம் கடற்படையினருக்கு அறிவித்துள்ளோம்.

இதேவேளை 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.