சில இடங்களில் இடியுடன் கூடிய மழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அதேவேளை, சப்ரகமுவா, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலையே நிலவும் என கணிக்கப்பட்டுள்ள அதேவேளை, சில மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மேற்கு, மத்திய, சபரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் இத்தகைய பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.
இதனால் ஏற்படக்கூடிய வீதி விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, பனிமூட்டமான காலப்பகுதிகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.