திருமலை எண்ணெய் குதங்களை மீள ஒப்படைக்குமா இந்தியா? ஆரம்பமானது பேச்சு
திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை மீளவும் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
“திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது குறித்து இப்போது பேசுவது பொருத்தமில்லை. இது பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது. இந்திய தூதரகமும் எம்முடன் ஒத்துழைக்கின்றனர். இந்த எண்ணெய்க் குதங்கள் லங்கா IOC நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளன.
எனினும், இது இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்தும். அத்துடன், அரசியல் ரீதியான முக்கியத்துவம் இதில் காணப்படுகிறது.
ஆகவே, நாம் முதலில் இந்திய அரசாங்கத்துடன் பேச வேண்டும். பின்னர் குறித்த நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எம்மால் முடியும்” என்றார்.
இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்திலும் இந்த எண்ணெய் குதங்களை மீள பெற்றுக்கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அது தோல்வியில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.