
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 339 பேர்
கொரோனா காரணமாக நாடு திரும்ப முடியாமல் மூன்று நாடுகளில் சிக்கியிருந்த 339 பேர் இன்று அதிகாலை மத்தல விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் 287 இலங்கையர்கள் மத்தல விமான நிலையத்தின் வாயிலாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 47 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமா நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.
இதேபோல, இந்தியாவின் மும்பை நகரில் இருந்து 5 இலங்கையர்களும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
ஓமானில் இருந்து நாடுதிரும்பிய 7 பேருக்கும், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், லெபனான முதலான நாடுகளில் இருந்து நாடு திரும்பியிருந்த தலா ஒவ்வொருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 374 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நாட்டில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 20 பேர் நேற்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொவிட் 19 தொற்றில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 230 ஆக அதிகரித்துள்ளது.