இரண்டாவது நாடாக இடம்பெறவுள்ள 20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனைகள்

இரண்டாவது நாடாக இடம்பெறவுள்ள 20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனைகள்

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனைகள் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

20ம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பான பரிசீரலனைகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டன.

நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது, உத்தேச 20ம் திருத்த சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 53 திருத்தங்கள் அடங்கிய ஆவணம் சட்டமா அதிபரினால் நேற்றைய தினம் உயர்நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

20ம் திருத்த சட்டமூலத்தில், நாடாளுமன்றத்தை ஒராண்டு நிறைவின் பின்னர் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் திருத்தம் மேற்கொண்டு அதனை இரண்டரை ஆண்டுகளாக நீடிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகளின் கீழ், தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழல் ஏற்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கான அதிகாரம் உள்ளது என்ற சரத்து அந்த திருத்தத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர், காவல்துறைமா அதிபர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம், பிரதம நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், நீதிபதிகள், நீதிச்சேவை ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள், கணக்காய்வாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் முதலான பதவிகளுக்கு ஜனாதிபதியினால் நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதானது அரசியலமைப்பின் 41ஆவது சரத்திற்கு அமைவானதாகும் என்றும் அந்த திருத்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொள்ளும் நேரடி அதிகாரம், ஜனாதிபதிக்கு கிடைப்பதாக 20 ஆம் திருத்த சட்டமூலத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பிரதமருக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் செயலாளர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதுடன், அவர் பிரதமரின் ஏற்பாடுகளின் கீழ் சேவையாற்ற வேண்டும் என்ற சரத்தும் சட்டமா அதிபர் உயர்நீதிமன்றில் முன்வைத்த திருத்தங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது

இரட்டை குடியுரிமை கொண்ட ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க இயலாது என்ற சரத்தினை நீக்குவதற்கு 20 ஆவது திருத்த சட்டம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் புதிய திருத்தங்களில் மாற்றமின்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.