செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் மட்டுமே இறக்குமதி - அரசாங்கம் திட்டவட்டம்

செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் மட்டுமே இறக்குமதி - அரசாங்கம் திட்டவட்டம்

சந்தையில் போதுமான அளவு அரிசி காணப்படுவதாக வர்த்த அமைச்சின் செயலாளர் சந்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே அரிசி இறக்குமதிக்கான தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை. எவ்வாறெனினும் செயற்கையாக அரிசி தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டால் அதனை சமாளிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு தேவையான அரிசியை உற்பத்தி செய்வதற்கான நெல் தொகை நாட்டில் சேமிப்பில் உள்ளது.

பெரும்போக மற்றும் சிறுபோக நெற்பயிர்ச்செய்கைகளின் ஊடாக மக்களின் கேள்வியை பூர்த்தி செய்வதற்கான நெற்தொகை அறுவடை செய்யப்பட்டுள்ளதாக வர்த்த அமைச்சின் செயலாளர் சந்ராணி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விவசாயிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட நெல், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளுக்கமைய ஒக்டோபர், நவபம்பர், டிசம்பர் மாதங்களில் சந்தையில் அரிசிக்கான குறைவு ஏற்படக்கூடும். எனினும் குறித்த நிலை ஏற்படாத வண்ணம் விவசாய அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

எனினும் சந்தையில் செயற்கையான அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் மாத்திரம் அரிசி தொகையை இறக்குமதி செய்வது தொடர்பில் விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் சந்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.