1000 ரூபாய்க்கான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது

1000 ரூபாய்க்கான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,000 வேதன அதிகரிப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரதமர், 1,000 ரூபா வேதனத்தை வழங்குவதற்கான அறிவிப்பை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் 1,000 ரூபா வேதன அதிகரிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது தானே பிரதமர் என்றும், பேச்சுவார்த்தை ஊடாக அதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும்போது ஏற்படும் நடைமுறை பிரச்சினைகளே, மலையக மக்களுக்கான இந்திய வீடமைப்பு நிர்மாணப் பணிகள் தாமதமடைவதற்கு காரணமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இன்று மதியம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் தோட்ட மக்களுக்காக 4,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரையில் 669 வீடுகளின் நிர்மாணப் பணிகள் முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், வீடமைப்பு திட்டம் தாமதமடைந்தமைக்கு குறித்த விடயமே காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

தோட்ட மக்கள் வாழும் லயன்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, லயன்களை அண்மித்ததாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதன் மூலம் இத்திட்டத்தின் நன்மைகளை விரைவாக மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியுமென ஜனாதிபதியும், பிரதமரும் சுட்டிக்காட்டினர்.

தோட்ட மக்கள் வாழும் சூழலிலிருந்தே அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வீடமைப்பு திட்டமிடலை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதன் மூலம் நிர்மாணப் பணிகளின் தரத்தை சிறப்பாக பேண முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேநேரம், பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுடன் இணைந்ததாக தனியார் தோட்ட நிறுவனங்களும் தமது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தோட்ட வீடுகள் மற்றும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு, சுகாதாரம், கல்வி, விவசாயம், வீடமைப்பு, விளையாட்டு உள்ளிட்ட அமைச்சுக்களின் உதவியை பெற்று, தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோட்ட முன்பள்ளி பாடசாலைகள், ஆரம்ப பாடசாலைகள், சுகாதார தேவைகளுக்காக மருத்துவ நிலையங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

தோட்டங்களை அண்மித்து வாழும் இளைஞர், யுவதிகளுக்கு தேசிய தொழில்சார் தகைமை மட்ட சான்றிதழை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொழில் பயிற்சியை வழங்கி, தொழில் வாய்ப்புக்களை வழங்குவதன் அவசியம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தோட்டங்களை அண்மித்ததாக உள்ள 438 சுகாதார நிலையங்களை அரசின் கீழ் கொண்டு வந்து, சிறந்த சேவையை தோட்ட மக்களுக்காக துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பண்டாரவளை, ஹட்டன், நுவரெலியா மற்றும் எல்ல பிரதேசங்களை மையப்படுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.