கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களிடம் இன்றும் வரி அறவீடு! கடும் விசனம் வெளியிட்டுள்ள வர்த்தகர்கள்

கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களிடம் இன்றும் வரி அறவீடு! கடும் விசனம் வெளியிட்டுள்ள வர்த்தகர்கள்

கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களிடம் இன்றும் வரி அறவீடு செய்த கரைச்சி பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்பில் வர்த்தகர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கர்த்தால் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சி சேவை சந்தையின் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை.

இவ்வாறான நிலையில் மக்களிற்கான அத்தியாவசிய மரக்கறி, மீன், இறைச்சி உள்ளிட்டவற்றை கிளிநொச்சி கனகபுரம் வீதியில் வைத்து வர்த்தகர்கள் விற்பனை செய்து வந்தனர். இவ்வாறான நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற கரைச்சி பிரதேச சபை ஊழியர்கள் வர்த்தகர் ஒருவருக்கு 500 ரூபா வரி பணத்தினை சிட்டையிட்டு பெற்றுள்ளனர்.

குறித்த சம்பவம் வர்த்தகர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் வர்த்தகர்கள் தெரிவிக்கையில்,

இன்று காலை வழமைபோன்று வர்த்தக நடவடிக்கைகளிற்காக கிளிநொச்சி சந்தைக்கு சென்றிருந்தோம். எவ்வித முன்னறிவித்தலும் இல்லாது சேவை சந்தையின் பிரதான வாயில் பூட்டப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் எமது பொருட்களை வீதி ஓரத்தில் வைத்து விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.

சந்தை பிரதான வாயில் திறந்திருந்தால் அங்கு சென்றிருப்போம். அல்லது முன்னறிவித்தல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறான நிலையில் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆனால் இங்கும் வர்த்தகர்களிற்கு வரியை அறவிடுகின்றனர். எமது பொருட்களை விற்பனை செய்வதற்கு சந்தையை திறந்து விட்டிருந்தல் நாங்கள் அங்கு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்போம்.

ஆனால் அதனை அவர்கள் செய்யாது எமக்க வரிப்பணத்தை அறவிடுகின்றனர் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் பிரதேச சபை பொறுப்பதிகாரியிடம் வினவியபோது, வர்த்தக செயற்பாடுகளிற்கு சந்தை தொகுதி திறந்து விடப்பட்டிருந்ததாகவும் அங்கு வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடாது இங்கு மேற்கொண்டு வருகின்றமையாலேயே தாம் இவ்வாறான அறவீடு மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆயினும் இன்று காலை 7.30 மணிவரை சேவைச்சந்தையின் பிரதான வாயில் பூட்டப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது