முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமீரகம் புறப்பட்ட போது கிட்டத்தட்ட 9 பேட்டுகளை உடன் எடுத்து வந்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த ஒரு பேட்டியில், ‘20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடும் போது பேட்டிங்கில் அதிகமான அதிரடி காட்ட வேண்டியது அவசியமாகும். இதே போல் புதுமையான ஷாட்டுகளை அடிப்பதற்கு நிறைய பயிற்சியும் தேவை. இதனால் பேட் சீக்கிரமாகவே உடைந்து விடுவதற்கு வாய்ப்பு உண்டு. ஐ.பி.எல். மற்றும் 20 ஓவர் போட்டிகளின் போது எனது பேட் ஒன்று அல்லது 2 மாதங்கள் தாக்குப்பிடிக்கும். ஆனால் தற்போதைய கடினமான காலக்கட்டத்தில் கொரியர் சேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை. அதனால் முன்னெச்சரிக்கையாக அமீரகம் புறப்பட்ட போது, கிட்டத்தட்ட 9 பேட்டுகளை உடன் எடுத்து வந்தேன்’ என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ஆடும் லெவனில் இடம் பெறும் வீரர்கள் மற்றும் வெளியில் இருக்கும் வீரர்கள் அணிக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை அவர்களுக்குள் உணரச் செய்யும் வகையில் கேப்டன் பேச வேண்டும். இது ரிக்கிபாண்டிங்கிடம் (மும்பை அணியின் முன்னாள் பயிற்சியாளர்) இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம்’ என்றார்.