எஸ்.பி.பி மறைவு – கும்ப்ளே கண்ணீர் இரங்கல் : அஸ்வின் கலக்கம்!

எஸ்.பி.பி மறைவு – கும்ப்ளே கண்ணீர் இரங்கல் : அஸ்வின் கலக்கம்!

எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர்களான அஸ்வின், விஜய் சங்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கடந்த மாதம் 5ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

கொரோனாவில் இருந்து மீண்டவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் மறைவு திரை உலகை உலுக்கி உள்ளது.

இவரின் மறைவிற்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கிரிக்கெட் உலகை சேர்ந்தவர்கள் உடன் எஸ்.பி.பி நெருக்கமாக இருந்தார். இதனால் இந்திய கிரிக்கெட் உலகை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி.பி மறைவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் அணில் கும்ப்ளே தெரிவித்துள்ள இரங்கலில், பாடகர் எஸ்.பி.பி மறைவு செய்தி கேட்டு உடைந்து போனேன். இந்திய சினிமா உலகின் லெஜெண்ட் அவர்.

அவரின் பாடல்கள் காலத்திற்கும் எதிரொலிக்கும். கிரிக்கெட் மீது அவருக்கு இருக்கும் காதல், அவருடனான நட்பு, சென்னையில் நாங்கள் சந்தித்த நாட்கள் அனைத்தையும் எப்போதும் நினைவு கூறுவேன்.

சுதாகர், சைலஜா, சரண் மற்றும் பிற குடும்பத்தினர் அனைவருக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்., என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ள இரங்கலில், துக்க செய்திகள் தொடர்ந்து வருகிறது. எஸ்.பி.பி மறைவு செய்தி கேட்டு சோகம் அடைந்தேன். அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். அவர் இசையை காதலித்தார், இசை அவரை காதலித்தது. ஓம் சாந்தி, என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ள இரங்கலில் இந்த வருடம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. கடவுளே.. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.. எஸ்.பி.பி ஆன்மா சாந்தி அடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே, எஸ்.பி.பி மறைவை கேட்டு துக்கம் அடைந்தேன். அவருக்கு பிரியா விடைகொடுக்கிறேன். அவர் பாடல்களை நமக்காக விட்டு சென்று உள்ளார் என்று ஹர்ஷா போக்லே குறிப்பிட்டு உள்ளார்.

தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர், இந்த தேகம் மறைந்தாலும், இசையாய் மலர்வேன் என்று, பாடல் வரிகளை நினைவு கூர்ந்துள்ளார்.