புதிய அரசியலமைப்பு தொடர்பான பரிசீலணைக்கு உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம்!

புதிய அரசியலமைப்பு தொடர்பான பரிசீலணைக்கு உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம்!

கோட்டா-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்த யோசனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் செப்டெம்பர் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளன.

இந்த மனுமீதான பரிசீலனைகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாமும் நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபுக்கு எதிராக உச்சநீதிமன்றில் இதுவரை 12 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன், சட்டத்தரணி இந்திக்க கால்லகே, மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் என 12 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தின் சில அத்தியாயங்கள், தற்போது நடை முறையில் உள்ள ஸ்ரீலங்கா அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது என்பதால், அதனை நிறைவேற்ற வேண்டுமானால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விஷேட பெரும்பான்மைக்கு மேலதிகமாக பொது மக்கள் வாக்கெடுப்பும் நடத்தப்படல் வேண்டும் என தீர்ப்பொன்றினை வழங்குமாறு கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செப்டெம்பர் 29 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை இந்த மனுமீதான பரிசீலனைகளை மேற்கொள்ள உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாமும் நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நீதிபதி ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான இந்தக் குழாமில் புவனேக அலுவிஹார, ஜெயந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் சிசிற டி ஆப்ரூ ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.