இலங்கையில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் கோடிக்கணக்கான பணம்
இலங்கையில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு செலாவணி சட்டத்தில் உள்ள சிக்கல்களை பயன்படுத்தி, மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மத்திய வங்கிக்கு கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க போதரகம நேற்று உத்தரவிட்டார்.
கிரிப்டோகரன்சி மூலம் நடைபெறும் பணமோசடிகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, அது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மத்திய வங்கிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தற்போதுள்ள வெளிநாட்டு செலாவணி சட்டத்தில் உள்ள பலவீனங்களைச் சாதகமாகப் பயன்படுத்தி, பல தரப்பினர் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் சூட்சுமமான முறையில் இந்த மோசடிகள் நடத்தப்படுகின்றது.
இது குறித்து பொதுமக்களுக்குப் போதிய புரிதல் இல்லை. எனவே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் இணைந்து இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவர்கள் தொடர்பான முறைப்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

தனியார் வங்கி ஒன்றின் ஊடாக இடம்பெற்ற 29 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே நீதவான் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தார்