ஜீவநகர் கிராம மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் மாவட்ட செயலகம் நடவடிக்கை!

ஜீவநகர் கிராம மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் மாவட்ட செயலகம் நடவடிக்கை!

ஜீவநகர் கிராம மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் மாவட்ட செயலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இந்த விடயம் தொடர்பில் இன்று ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

அண்மையில் ஊடகங்களில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவின் முத்தயன்கட்டு கிராம அலுவலர் பிரிவில் ஜீவநகர் என்கின்ற கிராமத்தில் 20 குடும்பங்கள் வீடுகள் பூரணப்படுத்தப்படாத நிலையிலும் அங்கு எந்தவிதமான அடிப்படை வசதிகள் நீரோ அல்லது மின்சாரமோ அல்லது பாதைகளோ புனரமைக்கப்படாத நிலையில் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் வறுமைப்பட்ட மக்கள் வாழ்வதாக முறைப்பாடு கிடைத்தது.

அதனடிப்படையில் நான் நேரடியாக கடந்த புதன்கிழமை கள விஜயம் செய்து அங்குள்ள நிலமைகளை ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலாளர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஒட்டுசுட்டான் கிராம அலுவலர் முத்தையன்கட்டு தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோருடன் சென்று பார்வையிட்டேன்.

அந்த நிலைமை பரிதாப நிலையாக இருந்ததன் காரணமாக நாங்கள் எமது மாவட்ட செயலகத்தால் வருகின்ற நிதிகளில் இருந்து இவ்வாண்டு அல்லது அடுத்த ஆண்டு அதற்கான செயற்பாடாக பொதுக்கிணறு அமைத்து கொடுப்பதற்கும் அதேபோல் அவர்களுக்குரிய மலசலகூட வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் பாதைகளை புனரமைப்பு செய்வதற்கும் மின்சார இணைப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக் கொண்டு இருக்கின்றோம். நிதி கிடைத்ததும் அதற்கான வேலைகளை ஆரம்பிப்போம் என்று தெரிவித்தார்.