களுத்துறையில் தொடரும் அச்சுறுத்தல் -அச்சத்தில் மக்களின் வாழ்க்கை

களுத்துறையில் தொடரும் அச்சுறுத்தல் -அச்சத்தில் மக்களின் வாழ்க்கை

 

களுத்துறை – ஹொரண மில்லனிய பிரதேசத்தில் அண்மையில் மக்களை அச்சுறுத்திவந்த நரிக்கூட்டம் தற்போது அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஓவிட்டியாகம பிரதேசத்தில் நுழைந்துள்ளதால் அந்த பிரதேசத்திலுள்ள மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் ஹொரண மில்லனிய பிரதேசத்தில் விசர்பிடித்த நரிகள் கடித்ததில் இருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில் ஓவிட்டியாகம பிரதேசத்திலும் அப்படியான விசர் நரிக்கூட்டம் நடமாடி வருவதாக பிரதேச மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள ஒருவரை நேற்று முன்தினம் இரவு நரியொன்று வீடு புகுந்து கடிக்க முயற்சித்தவேளை அவர் தடியொன்றினால் தாக்கியதில் நரி இறந்துள்ளது.

மறுநாள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த நரியின் தலையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அந்த நரி விசர்பிடித்திருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் மக்கள் இரவில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனால் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.