பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து தங்கம் திருடியவர்களை தேடிப்பிடித்த பொலிஸார்
திருகோணமலை - ஈச்சிலம்பற்று பகுதியில் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா பெருமதியான தங்க நகைகளை திருடிய மூவரை கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விநாயகபுரம், ஈச்சிலம்பற்று மற்றும் வெருகல் பகுதியைச் சேர்ந்த 31,27 மற்றும் 30 வயதுடைய மூவரே, இக்களவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈச்சிலம்பற்று பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள், வீட்டிலுள்ளோர் கோவிலுக்குச் சென்ற வேளையில், இவர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
இச்சந்தேக நபர்கள் பட்டப்பகலில் ஜன்னல் வழியாக புகுந்து ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா பெறுமதியான மூன்று பவுண் தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய இவர்களைக் கைது செய்து, விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்..