மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் அடித்துக்கொலை

மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் அடித்துக்கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முனைக்காடு பகுதியில் நேற்று (23) இரவு குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

முனைக்காடு தெற்கு வீட்டுத்திட்ட பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதியை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான இரட்ணசிங்கம் உதயன் (35 வயது) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

அப்பகுதிக்கு இன்று காலை வந்த நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். றிஸ்வான் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு குற்றத் தடயவியல் பிரிவு பொலிஸாரும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பிலான தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.