பிரமிக்க வைக்கும் ஆராய்ச்சி முடிவு! ஸ்ரீலங்கா வரலாற்றில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பம்

பிரமிக்க வைக்கும் ஆராய்ச்சி முடிவு! ஸ்ரீலங்கா வரலாற்றில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பம்

48 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த ஆதி மனிதன் விலங்குகளின் எலும்புகளில் ஆயுதங்களை செய்து, அவற்றை குரங்கு மற்றும் அணில்களை வேட்டையாட பயன்படுத்தி உள்ளதாக ஆராய்ச்சி ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

இலங்கையர்கள் உட்பட அனுபவம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த ஆராய்ச்சியை நடத்தியுள்ளது.

நோயேல் அமானோ, ஓஷான் வேடேஜ், சிரான் தெரணியகல, எம்.எம்.பத்மலால், நிமல் பெரேரா, நிகோல் பொய்வின், மைக்கல் டி பெட்றிக்லியா, பெட்றிக் ரொபடீஸ் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தியுள்ளனர்.

ஆபிரிக்காவுக்கு வெளியில் வில் அம்பு தொழில்நுட்பம் பயன்படுத்தியமைக்கான பழமையான சாட்சியம் இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இலங்கையின் ஃபா - ஹின் லினா குகைகளில் இருந்து குரங்கு மற்றும் அணில்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவற்றை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த ஆராய்ச்சி முடிவில் ஆதி மனிதன் வேட்டையாடினான் என்பது தெரியவந்துள்ளது. இந்த குகையானது தெற்காசியாவில் ஹோமோ சேபியன்ஸ் மனிதர்களின் பழமையான புதைபடிவங்கள் கிடைத்த இடமாகும்.

குகையில் கிடைத்த சில எலும்புகள் ஆயுதங்களாக காணப்பட்டுள்ளன. மலை காடுகளில் மிக வேகமாக பயணிக்கும் சிறிய விலங்குகளை ஆதி மனிதன் வெற்றிகரமாக வேட்டையாடி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.