20 ஆவது திருத்தம் பசிலுக்கானதல்ல – அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கருத்து !

20 ஆவது திருத்தம் பசிலுக்கானதல்ல – அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கருத்து !

முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் பசில் ராஜபக்ஷவிற்கானது அல்ல என்றும் அது தனது முடிவு என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதத்தில் 19 ஆவது திருத்தத்தை தொடர்ந்தும் வைத்திருக்க விரும்பினால் அதனை வைத்திருக்கலாம் எனவும் ஜனாதிபதி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த விடயம் தொடர்பாக தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் அரசமைப்பு மாற்றங்களை கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, மாற்றங்களை மேற்கொள்ளாமல் நாட்டை நிர்வகிப்பது கடினமான விடயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

19 ஆவது திருத்தம் சில அரச சார்பற்ற அமைப்புகளின் முயற்சிகளினால் கொண்டுவரப்பட்டது எனவும் அதில் உள்ள சிறந்த விடயங்களை புதிய திருத்தத்தில் இணைத்துக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புதிய அரசமைப்பின் நகல் வடிவம் தயாரானதும் மாற்றங்களை கோருவதற்கும் புதிய விடயங்களை சேர்ப்பதற்கும் அனைவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.