புங்குடுதீவில் கரையொதுங்கிய சடலம்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போனவர் இரண்டு நாட்களின் பின் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.
குருநகர் சென்.பற்றிக்ஸ் வீதியை சேர்ந்த வேலு உதயகுமார் (வயது 62) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குருநகர் பகுதியில் இருந்து கடந்த 25ஆம் திகதி கடற்தொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.
அது தொடர்பில் குடும்பத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததுடன் , காணாமல் போனவரை தேடும் பணியில் சக தொழிலாளிகளும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் , நேற்றைய தினம் புதன்கிழமை மாலை புங்குடுதீவு 3ஆம் வட்டார பகுதி , கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் , குருநகர் பகுதியில் இருந்து தொழிலுக்கு கடலுக்கு சென்றவரே என்பதனை கண்டறிந்து உறவினர்களுக்கு தகவல் வழங்கியதுடன் , சடலத்தை மீட்டு ,உடற்கூற்று பரிசோதனைக்காக போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.