
மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் திரு வழிபாடுகள் நிறைவேற்றுவது தொடர்பில் அறிவுறுத்தல்
மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் திரு வழிபாடுகள் நிறைவேற்றுவது தொடர்பாக மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
குறித்த கோரிக்கையானது அருட்தந்தையர்களுக்கும், அருட்சகோதர சகோதரிகளுக்கும், இறைமக்களுக்கும் இன்றைய தினம் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக ஆயர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும்,
எங்களுக்கு ஒரு சில மக்களோடு திருவழிபாடுகள் நிறைவேற்ற அரசாங்கத்தினால் தரப்பட்ட அனுமதிக்காக நாங்கள் அரசாங்க அதிகாரிகளுக்கு நன்றி கூறுகின்றோம்.
இன்று வெள்ளிக்கிழமை ஆனி மாதம் 12ஆம் திகதி தொடக்கம் மீளவும் நாங்கள் ஒரு குறிப்பிட்ட இறைமக்களுடன் (50 பேருக்கு குறைந்த இறைமக்களுடன்) திருப்பலி நிறைவேற்ற அனுமதியுண்டு.

'கொரோனா' தொற்று நோயானது தொடர்ந்தும் மக்களை பாதிக்கும் நிலையில் இருப்பதால் அரசாங்கம் எங்களுக்கு வழங்கியிருக்கும் சில சுகாதார வழி முறைகளையும், இலங்கை ஆயர் பேரவை வழங்கியிருக்கும் பின்வரும் பரிந்துரைகளையும் கடைப்பிடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1) எமது ஆலயங்களுக்கு உட்பிரவேசிக்கும் முன் ஒவ்வொருவரும் சவர்க்காரங்களை இட்டு கைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
2) ஆலயங்களுக்குள் இருக்கும் முழு நேரமும், முகக்கவசம் அணிந்திருத்தல் அவசியம். தூய நற்கருணை பெறும் நேரத்தில் மாத்திரம் அதை களைந்து அதன் பிறகு அதனை மீளவும் அணிந்து கொள்ளல் வேண்டும்.
திவ்விய நற்கருணை வழமைப்போல் வழங்கப்படலாம். இக்காலக்கட்டத்தில் மட்டும் யாராவது கையில் திவ்விய நற்கருணையை பெற விரும்பினால் அதை அவர்கள் தகுந்த மரியாதையுடன் பெற்றுக் கொள்ளலாம்.
3) மக்கள் ஆலயங்களுக்குள் வந்து தனித்தனியாக செபிக்கக்கூடியதாக ஆலயங்கள் திறந்து வைக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஒவ்வொருவருக்கும் இடையில் தகுந்த (சமூக) இடைவெளியானது பேணி பாதுகாக்கப்படல் வேண்டும்.
4) ஆனி 12ஆம் திகதி தொடக்கம் மக்கள் ஒரு கிழமைக்கு ஒரு தடவை திருப்பலியில் பங்குக்கொள்ளும் விதத்தில் பங்குகளில் ஒழுங்குகள் செய்து கொள்ளல் வேண்டும்.
5) அன்பியங்களின் ஊடாக ஒரு திருப்பலிக்கு 50இற்கு குறைவுப்பட்ட மக்கள் இருக்கும் வகையில் ஒழுங்குப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
6) ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கலாம். ஒரு பங்கில் 2 அல்லது 3 அருட்பணியாளர்கள் பணி புரியும் பட்சத்தில் அதற்கு தகுந்த விதத்தில் திருப்பலிகளை ஒழுங்குப்படுத்திக் கொள்ளலாம்.
7) இப்படியான ஒரு சூழ் நிலையிலே கத்தோலிக்க இறைமக்கள் கட்டாயமாக ஞாயிறு திருப்பலிகளில் தான் பங்கு கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதை அவர்கள் இவ்வளவு காலமும் தொலைக்காட்சி, இணையத்தளங்கள் ஊடாக நிறைவேற்றிய விதத்தில் தொடர வேண்டும்.
8) இக்கால கட்டத்தில் பொதுவாக ஆசீநீர் பாவனையை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
9) 50 இற்கு குறைவுப்பட்ட மக்கள் கூட்டத்துடன் அன்பிய வழிபாடுகளை ஒவ்வொருவருக்கும் இடையிலான தூரத்தை பேணி நடத்தலாம்.
10) மற்றும் பக்திசபை கூட்டங்களையும், அவ் விதத்தில் நடத்தலாம்.
வேறு விடயங்கள் இருப்பின் ஆயர் தந்தையுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனையும் ஆயர் தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.