
மூத்த மனைவி வெளிநாட்டில்! மற்றொரு பெண்ணை கொலை செய்து காட்டிற்குள் புதைத்த கணவன்
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு குடியிருப்பு பகுதியின் பின்னால் உள்ள காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணொருவரை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சம்பவம் தொடர்பில் அந்த பெண்ணின் கணவர் என கூறப்படும் வான்எல, கந்தளாவை சேர்ந்த இகலகெதர மஹிந்த ஜெயலபண்டார (வயது 41) என்பவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது “தனது மனைவியான இந்திரானி மில்வான (வயது 51) எனும் பெண்ணை மண்வெட்டியால் தாக்கியதாகவும், அவர் உயிரிழந்த பின்னர் தனது வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் குழி தோண்டி புதைத்து விட்டதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய நிலையில், தனக்கு இரு மனைவிகள் உள்ளதாகவும், மூத்த மனைவி வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், கொலை செய்யப்பட்டவரான மினுவாங்கொட - திவுலபிடிய பகுதியை சேர்ந்த பெண்ணுடன் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
குடும்ப பிரச்சினை காரணமாகவே குறித்த பெண்ணை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை இன்றைய தினம் நீதிமன்றத்தில் மூத்த மனைவியின் விவாகரத்து தொடர்பான வழக்கு சந்தேகநபரான இகலகெதர மஹிந்த ஜெயலபண்டாரவிற்கு இருந்ததாகவும் தெரியவருகிறது.
சம்பவ இடத்திற்கு இன்று தடயவியல் பொலிஸார் மற்றும் சட்டவைத்திய அதிகாரி சென்று விசாரணையில் ஈடுபட்டு வருவதுடன் கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசானி தேனபது சடலம் புதைக்கப்பட்ட குழியினை தோண்டுவதற்கு அனுமதியளித்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தோண்டி எடுக்கப்பட்ட சடலம் திருகோணமலை பொதுவைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.