வடக்கில் பௌத்த சிலைகளை வைக்க வேண்டாமென கூற விக்னேஸ்வரனுக்கு எந்த அதிகாரமுமில்லை - புதிய நா.உறுப்பினர்
இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதால் நாட்டின் நாலாபுரங்களிலும் புத்தர் சிலைகளை வைக்கவும் விகாரைகளை அமைத்து வழிபாடுகளை மேற்கொள்ள முடியும்.
வடக்கில் பௌத்த சிலைகளை வைக்க வேண்டாமென கூற சி.வி.விக்னேஸ்வரனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற உற்பத்தி வரிகள் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கருத்து வெளியிடுகையில்,
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5000 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.
எமது கண்களுக்கு முன்பு இவ்வாறு சிறுவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஜனாதிபதியும் பிரதமரும் அந்த விடயத்தில் உறுதியான தீர்மானங்கள் எடுக்க வேண்டும்.
இதேவேளை, ஒரு நேர்காணலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென கூறியுள்ளார்.
வடக்கில் பௌத்தர்கள் இல்லையென்பதால் புத்தர் சிலைகளை அமைக்க வேண்டிய தேவையும் இல்லையென அவர் கூறியுள்ளார்.
அவர் மகாவம்சத்தை ஏற்றுக்கொள்கிறாரா இல்லையான என்பது எமக்கு முக்கியமில்லை. முழு உலகமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.
வடக்கில் புத்தர் சிலைகளை வைக்க வேண்டாமென கூறுவதற்கு அவருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.
இதுவொரு பௌத்த நாடு. நாட்டின் நாலாபுரங்களிலும் புத்தர்சிலையை வைத்து வழிப்படவும் விகாரைகளை அமைக்கவும் எமக்கு உரிமை உள்ளது என்றார்.